பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

முறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதற்கு ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் தலைவர்களால் ஏகமனதான தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜப்பக்ஷ தலைமையில் இது தொடர்பான கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை நாடாளுமன்றத்தில் கட்சி தலைவர்களின் விசேட கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

நாளைய தினம் இடம்பெறவுள்ள விசேட நாடாளுமன்ற அமர்வு குறித்தே இன்றைய தினம் இந்த கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 23ஆம் திகதி இடம்பெறவிருந்தது.

எனினும் சர்ச்சைக்குரிய பிணைமுறி தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை தொடர்பில் விவாதம் மேற்கொள்ள நாடாளுமன்றத்தை முன்னதாகவே கூட்டுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஜே.வி.பி என்பன சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்தன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், பிணை முறி தொடர்பான இறுதி அறிக்கை தொடர்பில் வாதிக்க உடன் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு, சபாநாயகர் கருஜயசூரியவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, நாளைய தினம் விசேட நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையில், இன்றைய தினம் கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதில், நாளைய தினம் விவாதிக்கப்படவுள்ள பிணை முறி தொடர்பான ஒவ்வொரு விடயங்களுக்கு ஒதுக்கப்பட உள்ள நேர அளவுகள் குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

SHARE