விசித்திர கட்டிடங்கள்!

குகைகளில் வாழ்ந்த மனிதன், அதிலிருந்து நெடுந்தூரம் முன்னேறி வந்துவிட்டான். ‘பாதுகாப்பாக வசிப்பதற்காக ஒரு வீடு’ என்று இருந்தது போய், ரசனைகளின் கலைக்குவியலாக இப்போது கட்டிடங்கள் உலகெங்கும் வடிவமைக்கப்படுகின்றன. அப்படி ‘ஆ’வென வாயைப் பிளக்க வைக்கும் விசித்திர, விநோதக் கட்டிடங்களின் அணிவகுப்பு இதோ…


நடனமாடும் வீடு

செக் குடியரசு நாட்டின் தலைநகரான பிராக் நகரத்தில் உள்ள இந்தக் கட்டிடத்தைப் பார்ப்பதற்கு இருவர் கைகோர்த்து நடனமாடு வது போலவே இருக்கும். கடந்த 1945ம் ஆண்டு அமெரிக்க குண்டு வீச்சில் தகர்க்கப்பட்ட பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் கட்டப்பட்டது. இதன் செல்லப் பெயர் ‘ஃப்ரெட் & ஜிஞ்சர்’ ஆகும்.

பிரபல நடனக் கலைஞர்களின் பெயரை ஒட்டியே இந்த செல்லப் பெயர் வந்தது. 1996ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடம், சுமார் 4000 சதுர மீட்டரில், ‘இடிபாட்டு ஸ்டைல்’ கட்டிடக்கலை முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இரு நடுப்பகுதியை வடிவமைக்க மொத்தம் 99 கான்க்ரீட் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. செக் குடியரசு, இந்த அதிசய வீட்டின் படத்தை தங்க நாணயத்தில் பொறித்து வெளியிட்டு, பெருமைப்படுத்தி உள்ளது.

கேபிடல் கேட்

ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள இந்தக் கட்டிடத்திற்கு, ‘அபுதாபியின் சாயும் கோபுரம்’ என்ற பெயரும் உண்டு. 160 மீட்டர் உயரத்தில் 35 மாடிகளை உடைய இந்தக் கட்டிடம் 18 டிகிரி சாய்வாக அமைக்கப்பட்டுள்ளது. 2011ல் கட்டி முடிக்கப்பட்ட ‘கேபிடல் கேட்’, ‘மனிதன் கட்டிய கோபுரங்களில் மிகவும் சாய்வானது’ என கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

‘ப்ரீ-கேம்பர்டு கோர்’ (Pre-cambered core) என்ற நவீன கட்டுமான தொழில் நுட்பத்தின் மூலம் இக்கட்டிடம் சரிந்து விழாமல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. பைசா நகரத்து சாயும் கோபுரத்தைவிட இக்கட்டிடம், நான்கரை மடங்கு அதிக சாய்வு நிலை கொண்டது. ஐந்து நட்சத்திர விடுதியும், அலுவலகங்களும் இங்கே அமைந்துள்ளன.

கோணல் வீடு

‘க்றிஸ்வி டொமெக்’ என்று போலிஷ் மொழியில் அழைக்கப்படும் இந்த விசித்திரமான ேகாணல் மாணல் கட்டிடம், போலந்து நாட்டின் ‘சோபாட்’ (Sopot) என்ற இடத்தில், ரெஸிடென்ட் என்ற ஷாப்பிங் சென்டரின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.

‘ஷாடின்ஸி’, ‘ஸலேஸ்கி’ ஆகிய கட்டிக்கலை கலைஞர்களால் ஃபேன்டஸி கதைகளில் வரும் வீடு போல் உருவாக்கப்பட்டு உள்ளது. நான்காயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோணல் வீட்டை, ‘கட்டிடக்கலையின் அற்புதம்’ என்று அழைக்கின்றனர். 2004ல் கட்டப்பட்ட இந்தக் கட்டிடமே, போலந்து நாட்டில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட கட்டிடம் ஆகும்.

பியானோ வீடு

சீனாவின் ஷன்னான் மாவட்டத்தின் ஹொய்னான் நகரத்தில் அமைந்துள்ள பியானோ வீடு, பிரமாண்ட பியானோ வடிவில் கட்டப்பட்டுள்ளது. 2007ல் கட்டப்பட்ட இந்த வீட்டுக்கும் இசைக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. கட்டிட வடிவமைப்பாளர்கள் தங்கள் பிளான்களை மக்களின் பார்வைக்கு வைக்க இக்கட்டிடத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இயல்பான ஒரு பியானோவை 50 மடங்கு பெரிய அளவில் நிறுத்தி வைத்தது போல இந்தக் கட்டிடம் கட்டப்பட்டிருப்பது ஒரு சாதனை ஆகும். இதன் உள்ளே படிக்கட்டும், மின்தூக்கியும் அமைக்கப்பட்டுள்ளது. பியானோ வீட்டை இரவில், மின்னும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்பது கண்கொள்ளாக் காட்சி ஆகும்.

கியூபிக் ஹவுஸ்

நெதர்லாந்து நாட்டின் ராட்டர்டாம் நகரில் அமைந்துள்ளது க்யூபிக் ஹவுஸ். க்யூப் விளையாட்டில் பயன்படுத்தும் கன சதுரத்தை ஒன்றின் மீது ஒன்று அடுக்கி வைத்தது போல இருக்கும் 38 வீடுகளின் இணைப்பு இது.

பியட் பிளாம் என்ற கட்டிடக் கலைஞர் உருவாக்கியது. முதலில் ஹெல்மாண்ட் என்ற நகரில் 18 வீடுகளோடு ஒரு மாதிரி வடிவத்தை இதேபோல கட்டியவர், அதன் தொடர்ச்சியாக 39 வீடுகளோடு ராட்டர்டாம் நகரில் இந்தக் கட்டிடத்தைப் படைத்தார். நகரத்து சூழலில் இருக்கும் கிராமம் என்பதுதான் இந்தக் கட்டிடத்தின் அழகு. ‘ஒவ்வொரு வீடும் ஒரு மரம்; எல்லா வீடுகளும் இணைந்தது ஒரு காடு’ என்பது அவரின் கற்பனை.

கன்சாஸ் நகர நூலகம்

யு.எஸ்.ஸின் கன்சாஸ் நகரில் அமைந்துள்ள இந்த நூலகம், ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த கட்டிடம் ஆகும். இதன் வெளிப்புறம், ஒரு புத்தக அலமாரி போல் வடிவமைக்கப்பட்டு, அதில் 22 மெகா சைஸ் புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு புத்தகத்தின் முதுகுப் பகுதியும் 25 அடிக்கு 9 அடி அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1873ல் தொடங்கப்பட்ட இந்நூலகம், கன்சாஸ் நகரின் மிகப் பழமையான மற்றும் மூன்றாவது பெரிய பொது நூலகமாகும். ‘டேல் ஆஃப் டூ சிட்டீஸ்’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘இன்விஸிபிள் மேன்’, ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’ ஆகியவை இக்கட்டிட முகப்பில் இடம் பெற்றுள்ள நூல்களில் சில.

கிரேஸி வீடு

தேவதைக் கதைகளில் வரும் வீட்டைப் போல் வடிவமைக்கப்பட்ட இந்த கிரேஸி வீடு, வியட்நாமின் தலாட் (Dalat) பகுதியில் அமைந்துள்ளது. மிருகங்கள், சிலந்திவலை, குகைகள் ஆகியவற்றை பிரதிபலிப்பதுபோல் இந்தக் கட்டிடத்தின் மொத்த அமைப்பும் இயற்கை முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

1990ல் திறக்கப்பட்ட இந்த ஐந்து மாடி கட்டிடம், தலாட்டின் இயற்கை சூழலை பிரதிபலிப்பது போல் உள்ளது. இதன் வெளிப்புறத்தைப் போல உள்ளேயும் விசித்திரமான மரச்சாமான்கள், கலைப்பொருட்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகள் இங்கே தங்கலாம் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும்.

SHARE