ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து ஆராய ஐவர் அடங்கிய குழு!

2021ம் ஆண்டு வரையில் தமக்கு தடையின்றி ஜனாதிபதி பதவியை வகிக்க முடியுமா? என விளக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள கோரிக்கையை பரிசீலிக்கும் போது, அதில் பங்கேற்க அனுமதி கோரி இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உலப்பனே சுமங்க தேரர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்து விளக்குவதற்கு 5 நீதியரசர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதில் நீதியரசர்களான ஈவா வனசுந்தர, புவனக அலுவிஹார, கே.ரீ சித்ரசிறி, சிசுரு டி அப்ரு ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

2015ம் ஆண்டு 19ம் திருத்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இதன்படி 6 வருடங்கள் ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும்.

ஆனால் 19ம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தாம் 2021ம் ஆண்டு வரையில் ஜனாதிபதியாக தடையின்றி பதவி வகிக்க முடியுமா? என்பது தொடர்பில் தெளிவுப்படுத்துமாறு ஜனாதிபதி, உயர் நீதிமன்றத்தில் கோரி இருந்தார்.

இது குறித்து நாளையதினம் ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழு ஆய்வு செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE