இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி 12 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு பஸ்களில் பயணம் செய்வதற்கான முன்பதிவு 9-ந் தேதி முதல் தொடங்கப்படுவதாக இருந்தது.
ஆனால் பஸ் தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக பொங்கல் பண்டிகை சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா? சொந்த ஊருக்கு செல்ல முடியுமா? என்று பொதுமக்கள் ஏங்கி தவித்தனர். இந்தநிலையில் ஏற்கனவே அறிவித்தபடி பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பஸ்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் இயக்கப்படும் என்றும், ஏற்கனவே அறிவித்த குறிப்பிட்ட 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் புறப்பட்டு செல்லும் என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
மேலும் சிறப்பு பஸ்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யத்தேவை இல்லை என்றும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகள் பஸ்களில் கண்டிப்பாக ஏற்றி அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் அண்ணா நகர் மேற்கு, சைதாப்பேட்டை நீதிமன்றம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு ஆகிய 5 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கின்றன.
செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பஸ்கள் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பஸ்கள் சைதாப்பேட்டை நீதிமன்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்படும்.
திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையமான மெப்ஸ்-ல் இருந்து புறப்படும். பூந்தமல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பூந்தமல்லி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும்.
மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களூரு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வழக்கம்போல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். அனைத்து பஸ் நிலையங்களுக்கும் இணைப்பு பஸ்கள் மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும்.
இத்தகவலை போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.
SHARE